”நான் ஏன் காந்தியை கொன்றேன்” - படத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம்
மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சே குறித்த why I killed gandhi திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
தேசத் தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவின் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள் குறித்த திரைப்படமானது பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தது. அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் இந்த திரைப்படத்திற்கு தடை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ''இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், அது மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மேலும், பொதுஅமைதியின்மையை சீர்குலைத்துவிடும். ஒற்றுமையின்மையையும், வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இது காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்திவிடும். அவரைக் கொன்ற ஆர்எஸ்எஸைச் சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்தும்.
எனவே, இப்படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் இப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை நாடவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.