முதல் டி20 போட்டியில் வெல்லப்போவது யார்? : இந்தியா - வெ. இண்டீஸ் இன்று மோதல்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில் டி20 தொடரையும் கைப்பற்ற இந்தியா முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தால் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் விலகியுள்ள நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் கோலி இன்னும் 73 ரன்கள் விளாசினால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவரான நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி சாதனை படைக்கும் வாய்ப்பை பெறுவார்.
அதேசமயம் 20 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு எதிரான சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 17 முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 10 முறை இந்தியாவும், 6 முறை வெஸ்ட் இண்டீஸூம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இப்போட்டிக்கான வீரர்களின் உத்தேசப் பட்டியலில் ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இந்திய அணியிலும், கைல் மேயர்ஸ், பிரான்டன் கிங், நிகோலஸ் பூரன், பொல்லார்ட் (கேப்டன்), ரோமன் பவெல், ஜாசன் ஹோல்டர், ரொமாரியா ஷெப்பர்டு, பாபியன் ஆலென், ஒடியன் சுமித், அகேல் ஹூசைன், ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளனர்.