"கொஞ்சம் நல்ல மாரி ரொம்ப வேற மாரி" - விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தெ.ஆப்பிரிக்கா; இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்!

cricket test match india vs sa
By Swetha Subash Dec 28, 2021 12:50 PM GMT
Report

இந்தியாவிற்கு எதிரான டெஸ்டில் தென்னாப்பிரிக்க தனது முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாவது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா ஆட்டமிழந்த பிறகு தென்னாப்பிரிக்க தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

முதல் ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார். அவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலே அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் ஆட்டமிழந்தார்.

அவர் 2 பந்தில் 1 ரன் எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

அந்த அணியின் ஸ்கோர் 25 ரன்களாக உயர்ந்தபோது இளம் வீரர் கீகன் பீட்டர்சனை முகமது ஷமி போல்டாக்கினார். அவர் 22 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரமும் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஷமி பந்தில் 34 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களை எடுத்திருந்த மார்க்ரம் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான வான்டர் டு சென் களமிறங்கினார். ஆனால், அவரும் 18 பந்தில் 3 ரன்களுக்கு எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்க அணி 32 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது தெம்பா பவுமாவும், குயின்டின் டி காக்கும் இணைந்து 5 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர்.

தென்னாப்பிரிக்க அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்களுடன் ஆடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பும்ரா தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரை இவர்கள் மூன்று பேர் மட்டுமே பந்துவீசியுள்ளனர். இன்னும் அஸ்வின், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் பந்துவீச காத்துள்ளனர்.

முன்னதாக, முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேற்கொண்டு 54 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 7 விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.