இரண்டாவது டெஸ்ட் போட்டி; தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு 240 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் தொடக்கத்தில் 58 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் ஆரம்பித்தது.
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய ரஹானே, புஜாரா இருவரும் இன்று தங்கள் ஆட்டத்தில் நிதானம் கடைபிடித்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் எடுத்தனர். ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க தவறினர்.
111 ரன்கள் எடுத்த இந்தக் கூட்டணியை ரபாடா பிரிக்க, இந்திய அணி அடுத்த சில மணிநேரங்களில் 29 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது.
அதிலும் ரிஷப் பந்த் வந்த வேகத்தில் திரும்ப, அஸ்வின் இரண்டு பவுண்டரிகளோடு 16 ரன்களோடு முடித்துக் கொண்டார். இதன்பின் வந்த ஷர்துல் தாக்கூர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.
சந்தித்த 24 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்ப, மறுபுறம் இருந்த ஹனுமா விஹாரி மட்டும் தென்னாப்பிரிக்க வேகத்தை தாக்குப் பிடித்து ஆடினார்.
ஆனால் அவருக்கு ஷமி, பும்ரா, சிராஜ் போன்ற டெயிலெண்டர்கள் கைகொடுக்க தவறினர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஹனுமா விஹாரி 40 ரன்களுடன் நாட் அவுட் பேட்ஸ்மானாக இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா, இங்கிடி, ஜேன்சன் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. வாண்டரர்ஸ் மைதானத்தில் இதுவரை இந்திய அணி வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.