ரூ.35,000 கோடி எங்கே போனது? இந்தியாவின் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

Corona Vaccine Modi BJP Government
By mohanelango May 14, 2021 10:03 AM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கொரோனாவை வென்று விட்டோம் என பாஜக பிரகடனப்படுத்தியிருந்த நிலையில் இரண்டாம் அலையை அரசாங்கம் உட்பட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் வல்லுநர்கள் ஆரம்பம் முதலே கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை நிச்சயம் தாக்கும் என எச்சரித்து வந்தனர். மத்திய அரசு வல்லுநர்களின் எச்சரிக்கைக்கு உரிய கவனம் செலுத்தவில்லை எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

கொரோனா பரவலைக் குறைக்க, கட்டுப்படுத்த முழு ஊரடங்கு தற்காலிக நிவாரணம் அளிக்கும். ஆனால் கொரோனாவை முழுமையாக வெல்ல தடுப்பூசி ஒன்றே சர்வரோக நிவாரணியாக உள்ளது.  இந்த ஆண்டின் பட்ஜெட்டில் தடுப்பூசி செலுத்துவதற்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்தியாவின் தடுப்பூசி கொள்கையும் தேக்க நிலையை அடைந்து குழப்பத்தில் முடிந்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக மத்திய அரசிடம் தெளிவான திட்டமிடல் இல்லை என்பதே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்தில் இருந்து ஊரடங்கு தொடங்கி தடுப்பூசி வரை மத்திய அரசு அனைத்து முடிவுகளையும் அதிகாரத்தையும் மையப்படுத்தி தன்வசமே வைத்துக் கொண்டது. மையப்படுத்தப்பட்ட அதிகாரமே தற்போது இந்தியா சந்திக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஃபைசர் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

ரூ.35,000 கோடி எங்கே போனது? இந்தியாவின் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? | India Vaccination Policy Is A Total Failure

இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் மத்திய அரசு தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கி வந்தது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கும்.பின்னர் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அதன் பின்னர் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி அனுமதிக்கப்பட்டது. ஆனால் இது நாளடைவில் பெரும் சிக்கலுக்கு உள்ளானது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு பாரபட்சமான முறையில் தடுப்பூசி ஒதுக்கிடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மற்ற நாடுகள் எல்லாம் தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருந்தபோதே தங்களுடைய தேவைக்கும் அதிகமான தடுப்பூசிகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்துவிட்டன. ஆனால் இந்திய அரசு தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்ட பிறகும் போதிய அளவில் ஆர்டர் செய்யவில்லை.

அதே சமயம் 6 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. போதிய அளவில் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாமலே அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதியளித்துவிட்டது. இதனால் நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உருவானது. 

மாநில அரசுகளின் தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு தடுப்பூசிகளை மாநில அரசுகளும், தனியார் மருத்துவமனைகளும் நேரடியாக வாங்கிக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே குறைவாக நடைபெற்று வரும் உற்பத்தியில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும் 25 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்கும் 25 சதவிகிதத்தை தனியார் நிறுவனங்களுக்கும் விற்கலாம் என அறிவித்தது.

மேலும் மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என ஆடம்பரமாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால் போதிய தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் பல்வேறு மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவே இல்லை. ஏற்கனவே முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கும் இரண்டாவது டோஸ் கிடைப்பது சிக்கலானது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சீரம், பாரத் பயோடெக் தடுப்பூசிகளின் விலையை பல மடங்கு உயர்த்தின. மத்திய அரசுக்கு ஒரு விலைக்கும் மாநில அரசுக்கு விலை கூடுதலாகவும் தடுப்பூசி விற்கப்படுகிறது. நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிகள் வேண்டும் எனக் கோரிக்கைகள் உள்ள நிலையில் தடுப்பூசிகள் வெவ்வேறு விலைக்கு விற்பது சரிதான் என நியாயப்படுத்தி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது.

ரூ.35,000 கோடி எங்கே போனது? இந்தியாவின் தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன? | India Vaccination Policy Is A Total Failure

கோவிஷீல்டு, கோவேக்சின் மட்டுமே போதாது வெளிநாட்டு தடுப்பூசிகளையும் இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என குரல்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்நிக் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக் கொள்ள அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அனைத்து மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசிகளை வாங்க ஆர்டர் செய்யத் தொடங்கின.

ஆனால் உள்நாட்டு உற்பத்தி செய்யப்படுகிற தடுப்பூசிகளால் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவானது. தற்போது இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படும் வேகமும் கனிசமாக குறைந்துவிட்டது. மக்கள் தொகையில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தினால் தான் கொரோனா அச்சம் விலகும். இந்த வேகத்தில் சென்றால் இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும் நிலை உள்ளது.  

இதனால் வேறு வழியில்லாத மாநில அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய டெண்டர்களை அறிவிக்கத் தொடங்கின. ஆனால் இதிலும் சிக்கல் உள்ளது. மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு தடுப்பூசிகளை மட்டுமே மாநில அரசுகள் வாங்க முடியும். அவ்வாறு பார்த்தால் ஸ்புட்நிக் தடுப்பூசிக்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் மாநில அரசுகள் எவ்வாறு சர்வதேச சந்தையில் இருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்வார்கள் என்கிற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. ஸ்புட்நிக் தவிர இதர தடுப்பூசிகளை பெறுவது சாத்தியமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே கொரோனா முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மாநில அரசுகளின் நிதி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிச் சந்தையில் மாநில அரசுகளால் எவ்வாறு போட்டி போட்டு தடுப்பூசிகளை பெற முடியும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியாக தடுப்பூசிகளை வாங்க இருப்பதால் தடுப்பூசி நிறுவனங்கள் லாபம் பார்க்கும் வாய்ப்பாகவே இது அமையும் என எச்சரிக்கப்படுகிறது.

எனவே மத்திய அரசே நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்து இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. 

கடந்த பட்ஜெட்டின் போது ஒதுக்கிய ரூ.35,000 கோடியை மத்திய அரசு முழுமையாக செலவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள எதிர்க்கட்சிகள் அதில் தற்போது வரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளன.