இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி - தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை
இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனிடையே 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த மார்ச் 12 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகப்பட்சமாக ஸ்ரேயஸ் ஐய்யர் 92 ரன்கள் விளாசினார்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்களில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 303 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இலங்கை அணிக்கு 447 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸை விளையாட தொடங்கிய இலங்கை அணி வழக்கம்போல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே 107 ரன்களும், குஷால் மெண்டிஸ் 54 ரன்களும் அதிகப்பட்சமாக எடுக்க இலங்கை 208 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது.