இந்திய வீரர்கள் மீதான இனவெறி தாக்குதல் உண்மையே!
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனவெறி கருத்துகளால் பாதிக்கப்பட்டது உண்மைதான் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சிட்னியில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக பேட்டியளித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தடுப்பு தலைவர் ஷான் கேரல், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இனவெறி கருத்துகள் தெரிவிக்கப்பட்டது உண்மை தான் என்பதை ஒப்பு கொள்கிறோம்.
மைதானத்தில் இருக்கும் சிசிடிவி காட்சகள், டிக்கெட் தரவுகள், பார்வையாளர்களுடனான நேர்காணல்கள் ஆகியவற்றை பார்த்து இனவெறி கருத்துகள் கூறியவர்கள் அடையாளம் காணப்பட்டார்கள்.
அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணை முழுமையடைந்தவுடன் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.