இந்தியா தொடர் தோல்வி..பிசிசிஐக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

India T20 World Cup Krishnamachari Srikkanth
By Thahir Nov 01, 2021 02:30 PM GMT
Report

பிசிசிஐ அமைப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிரிஸ் ஸ்ரீகாந்த் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

2021 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மோசமாக ஆடி சொதப்பி உள்ளது. இந்திய அணி முதலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.

அதன்பின் நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி 2021 உலகக் கோப்பையில் செமி பைனல் செல்லும் வாய்ப்பே சிக்கலாகி உள்ளது.

இந்த நிலையில்தான் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதுதான் அணியின் தோல்விக்கு காரணம் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடர், இங்கிலாந்து இந்தியா டூர், இந்தியா இங்கிலாந்து டூர், ஐபிஎல் 2021 சீசனின் இரண்டு பாதி ஆட்டங்கள், உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று அடுத்தடுத்து பல்வேறு போட்டிகளில் ஆடி இந்திய அணி வீரர்கள் களைத்து போய் உள்ளனர்.

உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் இந்திய வீரர்கள் களைப்பில் உள்ளனர். முக்கியமாக கொரோனா காலம் என்பதால் பல வீரர்கள் 1 வருடமாக வீட்டிற்கு செல்லவில்லை.

சிலர் 6-7 மாதமாக குடும்பத்தை பார்க்கவில்லை. பயோ பபுளில் இருப்பதால் வீரர்கள் கடும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இந்திய அணியின் மூத்த பவுலர் பும்ராவும் இதே குற்றச்சாட்டை வைத்துள்ளார். எங்களுக்கு பிரேக் வேண்டும் என்று பும்ரா பேசி உள்ளார்.

இந்த நிலையில்தான், பிசிசிஐ அமைப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிரிஸ் ஸ்ரீகாந்த் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

அவர் செய்துள்ள ட்விட்டில், நான் வீரர்களை முழுமையாக ஆதரிக்கிறேன். மனச்சோர்வு என்பது முக்கியமான விஷயம்.

பிசிசிஐ இப்போதே இந்தியா ஆடும் ஆட்டங்களின் கால அட்டவணையை எப்படி திட்டமிட வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

எல்லா வீரர்களையும் கவனித்துக்கொள்வது குறித்து பிசிசிஐ யோசிக்க வேண்டும். நான் இந்திய வீரர்களை ஆதரிக்கிறேன். இதுதான் நாம் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நேரம், என்று கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.