Friday, Jun 27, 2025

பாலஸ்தீனை ஆதரித்தது இந்தியா - ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் போர்நிறுத்தம் கொண்டு வர வலியுறுத்தல்

India UN Israel Palestine Security Council
By mohanelango 4 years ago
Report

இஸ்ரேல் - பாலஸ்தீன் இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மிகக் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் கடுமையாக உயிரழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உடனடியாக தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இஸ்ரேல் - காஸா இடையிலான மோதல் தொடர்பாக விவாதிக்க ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக இந்தியா பேசியுள்ளது.

ஐ.நா.வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது, “இஸ்ரேல் - காஸா இடையிலான மோதலில் இந்தியத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவரின் மறைவுக்கும் இந்திய அரசு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உடனடியாக தணிப்பது அவசியம். தற்போதைய மோதல் உச்சநிலையை எட்டாமல் தவிர்க்க அதைச் செய்தாக வேண்டும். இருநாடுகளுக்கும் இடையே நேரடியாகவும் அர்த்தமுள்ள முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெறாமல் இருப்பது இருதரப்பினருக்கும் இடையிலான அவநம்பிக்கையை அதிகரித்து வருகிறது.

இது எதிர்காலத்திலும் தற்போது ஏற்பட்டுள்ளதை போன்ற மோதல் சம்பவங்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே அதிகரிக்கும். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருதரப்பினர் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை நிலைநிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும். முடிவாக பாலஸ்தீன் அமைதிக்கு இந்தியா தன்னுடைய ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. இருநாடு கொள்கை முறையாக அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.