123 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
இந்திய அரசு கொரோனா போன்ற நெருக்கடியான காலகட்டத்திலும் 123 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
அணி சேரா நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஹர்ஷ் வர்தன் இதனை தெரிவித்தார். இதில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கலந்து கொண்டுள்ளார்.
அதில் பேசிய ஹர்ஷ் வர்தன், “எங்களுடைய தேவையையும் மீறி உலகம் முழுவதும் உள்ள 123 நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. அனைவரும் பாதுகாப்பாகின்ற வரையில் யாருமே பாதுகாப்பாக இல்லை என்பதை இந்தியா உணர்ந்திருக்கிறது.
உலகம் முழுவதும் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் பாரபட்சம் இல்லாமல் கிடைப்பதற்கு இந்தியா வேலை செய்து வருகிறது. சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் ஆயுஷ்மான் பாரத் என்கிற திட்டத்தின் மூலம் 50 கோடி ஏழை மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். உலகிலேயே மிகப்பெரிய காப்பீடு திட்டம் இதுவே
இந்தியாவைப் போல உலக நாடுகளும் செயல்பட வேண்டும். மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு உள்ள தட்டுப்பாடுகளை களைய முற்பட வேண்டும்” என்றுள்ளார்.