குடித்து விட்டு மகன் செய்த காரியத்தால் உயிரிழந்த தாய்- நடந்தது என்ன?

By Jon Jan 06, 2021 11:51 AM GMT
Report

திண்டுக்கல்லில் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (71). இவருக்கு ரத்தினவேல் என்ற மகன் உள்ளார். மகன் ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

தாய்க்கும் மகனுக்கும் இடையே பல ஆண்டுகளாக குடும்ப தகராறு இருந்துள்ளது. ரத்தினவேல் குடிக்கும்போதெல்லாம் தாயிடம் தகராறு செய்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்து வந்தார். இந்நிலையில் இன்று மதுபோதையில் இருந்த ரத்தினவேல் மீண்டும் தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ரத்தினவேல் குடிபோதையில் தாய் முத்தமாளை அடித்து கீழே தள்ளி தாக்கி இருக்கிறார். ரத்தினவேல் தாக்கியதில் கீழே விழுந்த முத்தம்மாள் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கினார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு முத்தம்மாளை அனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் மருத்துவமனையில் முத்தம்மாளை பரிசோதனை செய்த டாக்டர்கள் முத்தம்மாள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர்.

மதுபோதையில் பெற்ற தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.