கங்கையில் மிதந்த கொரோனா சடலங்கள்? - எண்ணிக்கை எத்தனை? - மாநிலங்களவையில் பதில் சொல்லாத ஒன்றிய அரசு!
கொரோனாவால் பலியாகி கங்கை கரையில் மிதந்து வந்த சடலங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தங்களிடம் கிடையாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா முதல் அலை மற்றும் 2ம் அலையின் போது, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஓடக்கூடிய கங்கை ஆற்றின் கரை ஓரங்களில் கொரோனாவால் பலியானோரின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டது. இப்படி தூக்கி வீசப்பட்டப்பட்ட சடலங்கள் கங்கை நதிக்கரையில் மிதந்து கொண்டிருந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த சடலங்களை நாய்களும், பிற விலங்குகளும் சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடந்தது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் கங்கை கரையில் புதைக்கப்பட்டு ஆற்றில் மிதந்த சடலங்களின் எண்ணிக்கை குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓப்ரையன் மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், இதற்கு பதில் தெரிவித்த ஒன்றிய அமைச்சர் பிஸ்வேஷ்வர், கொரோனாவால் பலியாகி கங்கை கரையில் புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்த தகவல் ஒன்றிய அரசிடம் கிடையாது என்று தெரிவித்தார்.
