ஒலிம்பிக் நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!

india-sports
By Nandhini Aug 16, 2021 11:01 AM GMT
Report

டோக்கியோ ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்து மகிழ்ந்தார். 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. இந்தப் போட்டி கடந்த மாதம் 23ம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது.

இந்தப் போட்டியில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 33 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி பரவசப்படுத்தினர். நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை இந்தியா வென்றிருக்கிறது.

தடகளப் போட்டியில் 120 ஆண்டுகளுக்கு பிறகு முதல் தங்கத்தை வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா, புதிய சாதனை நாயகனாக திகழ்ந்தார். பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிகுமார் வெள்ளிப்பதக்கமும், குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்கள். இந்நிலையில், நேற்று நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்களை வெகுவாக பாராட்டினார். இந்நிலையில் இன்று ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் அனைவரும் பிரதமர் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார்.

அப்போது, தாங்கள் வாங்கிய பதக்கங்களை பிரதமரிடம் காட்டி வீரர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். அப்போது தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, வெண்கலப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் குழுவினருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். 

ஒலிம்பிக் நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி! | India Sports