பத்திரிகை சுதந்திர தரவரிசையில் மோசமான நிலையில் உள்ள இந்தியா...!
பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்தியா 150 வது இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.
மே 3 ஆம் தேதியான நேற்று முன்தினம் சர்வதேச பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி எல்லைகளற்ற பத்திரிகையாளர்கள் என்ற ஊடக கண்காணிப்பு நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஊடக சுதந்திரங்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 180 நாடுகளின் பத்திரிகை சுதந்திர தர வரிசை பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதில் நார்வே முதல் இடத்திலும், 2வதாக டென்மார்க்கும், 3வதாக ஸ்வீடனும், ஈஸ்டோனியா 4 வது இடத்திலும், பின்லாந்து 5 வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் ஈரான் 178 வது இடத்திலும், எரிட்ரியா 179 வது இடத்திலும், கடைசி இடத்தை வட கொரியாவும் பெற்றுள்ளது.
வல்லரசு நாடுகளான பிரிட்டன் 24 வது இடத்திலும், பிரான்ஸ் 26 வது இடத்திலும், அமெரிக்கா 42 வது இடத்திலும் உள்ள நிலையில், உக்ரைன் மீதான போர் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யா, இப்பட்டியலில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் சீனா 175 வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இதில் இந்தியா கடந்தாண்டை காட்டிலும் மிக மோசமாக 142 வது இடத்தில் இருந்து 150 வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இந்த வரிசையில் 30 இடங்கள் முன்னேறி 76 வது இடத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.