இந்தியாவுக்குள் நுழைந்த மியான்மர் மக்களை நாடுகடத்தக் கூடாது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சியே மீண்டும் பெரும்பான்மை இடங்களைப் கைப்பற்றிய நிலையில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்துள்ளது.
ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இராணுவத்தால் சிறை வைக்கப்பட்டனர். இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டமும் நாடு முழுவதும் வெடித்தது.
இந்தப் போராட்டங்களை இராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டங்களில் தற்போது வரை கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய எல்லை அருகே மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிருக்கு தஞ்சமடைந்தனர். இவர்களில் மக்களைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்கிற இராணுவத்தின் உத்தரவை எதிர்த்த இராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளும அடக்கம்.
இந்நிலையில் மியான்மர் எல்லையில் மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை தடுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் தஞ்சமடைந்த மியான்மர் மக்களை இந்திய அரசு திருப்பி அனுப்ப முடிவெடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதனை எதிர்த்து மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மியான்மர் குடிமக்களை நாடு கடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர்களை மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அழைத்து வந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அண்டை நாட்டில் இராணுவம் கொலை வெறித் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும்போது நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. அரசியலமப்பு வழங்கியுள்ள பாதுகாப்பு இந்திய குடிமக்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது