ஒமைக்ரான் இந்தியாவில் பரவினால் அவ்வளவு தான் - எச்சரிக்கும் நிதி ஆயோக் உறுப்பினர்
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவினால் தினமும் சுமார் 14-15 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் தொற்று உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 11 மாநிலங்களில் 113 ஒமைக்ரான் நோயாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.இதில் நேற்று மட்டும் 26 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93,045 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் மக்கள் தொகையில் 1 கோடியே 11 லட்சத்து 90 ஆயிரத்து 354 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஐரோப்பாவில் ஒமைக்ரான் பரவும் வேகத்தை இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால் நாளொன்றுக்கு 14-15 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை என்று வரிசையாக வரவிருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் நாடுகளில் ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.