ஹெலிகாப்டர் விபத்து - பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

india-samugam-pipin-rawat-helicopter-crash
By Nandhini Dec 08, 2021 11:08 AM GMT
Report

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பிரதமர் மோடியுடன், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருப்பதாகவும், இது குறித்து அவசர ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில், முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் கோவை செல்ல இருக்கிறார். விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார்.

விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட இருக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மூத்த பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் சந்திப்பு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கெனவே விபத்து குறித்து, பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசி இருப்பதாகவும், விபத்து குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.