கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு - 12 அடி உயர ஆதி சங்கரர் சிலை திறந்து வைத்தார்
உத்தரகாண்டில் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதற்கு முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தார். உத்தரகாண்டில் 2013ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் பலத்த சேதமடைந்தது. கோவில் அருகே இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
கோவில் மற்றும் சமாதியை புணரமைக்கும் பணியை ரூ.500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கி இருக்கிறார்.
இச்சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டன. 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆதி சங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக அங்குள்ள தேவ மந்திரங்கள் முழங்கிட சிவன் மற்றும் நந்தி சிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு செய்தார்.


