77 வயதில் பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி பாட்டி: 83 வயதில் விருது வாங்கிய சலூன் கடைக்காரர் - என்ன சாதனை செய்தார்கள்?
ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட பத்த விருதில் 77 வயது பழங்குடியின பாட்டியும், 83 வயது சலூன் கடை முதியவரும் விருதுகளை பெற்றுள்ளனர். 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது . இந்தப் பட்டியலில் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன .
துளசி கவுடா
கர்நாடாகா மாநிலத்தில் அங்கோலா தாலுக்காவில் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி கவடா(77).
இவர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவர். 1944 ம் ஆண்டு ஹக்கலி பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் இவர், காடுகளின் மரங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றிய அவரது விரிவான அறிவை கொண்டு இருப்பதால் "காடுகளின் கலைக்களஞ்சியம்" என்று அனைவராலும் அழைக்கப்படும் அவர் அங்குள்ள மக்களால் ' மரங்களின் தெய்வம் " என்றும் அழைக்கப்படுகிறார்.
விருது விழாவில் இவரது பெயர் அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நெருங்கிய துளசி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கைகூப்பி மரியாதை செலுத்தினார். பதிலுக்க அவர்களும் இவருக்கு வணக்கம் வைத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவியது.
முகமது ஷெரீப்
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சைக்கிள் மெக்கானிக்கான முகமது ஷெரீப்(83) என்பவரும் குடியரசு தலைவர் கையினால் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.
ஷெரீப் சாச்சா என்று அந்த பகுதி மக்களால் அன்பாக அழைக்கப்பட்டு வரும் இந்த முதியவர், அனாதை பிணங்களாக கண்டெடுக்கப்படும் உடல்களை எந்தவொரு மத பேதமின்றி அடக்கம் செய்து வருகின்றார். இதுவரை இவர் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதில் இந்து மற்றும் முஸ்லீம் மட்டுமின்றி கிறிஸ்தவர், சீக்கியர்களின் உடல்களையும் அடக்கம் செய்துள்ளார். இதற்கு காரணம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கரசேவகர்களால் உடைக்கப்பட்ட போது 1992ம் ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்துள்ளது.
அப்போது சுல்தான்பூர் என்ற ஊருக்கு ஷெரீப்பின் மகன் ரயீஸ் வேலை விடயமாக செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ரயீஸ் சுல்தான்பூர் சென்றபோது மத கலவரத்தில் சிக்கி, படுகொலை செய்யப்பட்டதோடு, அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் அருகே கேட்பாரற்று தெருநாய்களால் இழுந்துச் செல்லப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த முகமது ஷெரீப் வேதனைக்கு மத்தியில், ஒரு வைராக்கியத்தையும் கையில் எடுத்தார். அதாவது, அநாதை பிணங்கள் கண்டெடுக்கப்பட்டால், முகமது ஷெரீப்பே, அவற்றை மரியாதையோடு அடக்கம் செய்ய ஆரம்பித்தார்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு முகமது ஷெரீப் நாடு முழுக்க பிரபலமானார். அப்போதுதான் ஷெரீப் செய்யும் சமூக சேவை அனைவரது கவனத்திற்கும் சென்றது குறிப்பிடத்தக்கது.