ராஜினாமா முடிவு? அவசர அவசரமாக அமித்ஷாவுடன் அஜய் மிஸ்ரா ஆலோசனை - உ.பி.யில் நீடிக்கும் பதற்றம்
லக்கிம்பூர் சம்பவத்தில் அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா. உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் சம்பவத்தினால் பதற்றம் தீப்பற்றி எரிந்து வருகிறது.
இந்நிலையில், இந்த அவசர சந்திப்பு நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 9 பேர் இறந்தனர். இச்சம்பவத்தின் பின்னணியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமாரும், அவரது மகன் ஆசிஸ் மிஸ்ராவும் இருந்ததாகவும் இது திட்டமிட்டு இருவரும் திட்டமிட்டு செய்த கூட்டு சதி என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரின் மகன் தான் காரை ஏற்றி விவசாயிகளை கொலை செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், அமைச்சர் அதை மறுத்துள்ளார். ஆனாலும் விவசாயிகள் தரப்பில் அதற்கான ஆதாரங்களை வெளியிடப்பட்டு வருகிறார்கள்.
நடந்த வன்முறைக்கும், கொலைக்கும் தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் அஜய் மிஸ்ரா. இதனையடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா. இந்த சந்திப்பு அரைமணிநேரம் நீடித்தது. இந்த சந்திப்பின்போது லக்கிம்பூர் விவகாரம் குறித்து பேசப்பட்டிருக்கிறது என்றும், ஆனால் ராஜினாமா முடிவு தொடர்பான பேச்சு எதுவும் இடம்பெற வாய்ப்பு இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
