கொல்லப்பட்ட விவசாயி உடலுக்கு நள்ளிரவில் நடந்த பிரேத பரிசோதனை - கிராமமே சோகக் கண்ணீரில்
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான குர்விந்தர் சிங்கின் இறுதி சடங்குகள் இன்று அதிகாலை நடந்தது.
குர்விந்தர் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார். அந்த வன்முறை சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.
விவசாயி தலைவர் ராகேஷ் திகைத்தை சமாதானப்படுத்திய பின்னர், குர்விந்தரின் பிரேத பரிசோதனை மீண்டும் நள்ளிரவில் செய்யப்பட்டுள்ளது. நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதன் பிறகே, அந்த அறிக்கை தவறு என்று கூறி உறவினர்கள் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள்.
இதனையடுத்து, குர்விந்தரின் உடலுக்கு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அக்டோபர் 3 ஞாயிற்றுக்கிழமை, லக்கிம்பூர் கெரியின் டிகோனியாவில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் கொலை செய்யப்பட்டார்கள். இந்த வன்முறை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு, விவசாயிகளின் குடும்பத்தினர் இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்புக் கொண்டார்கள். அவர்கள் 4 பேரின் பிரேத பரிசோதனை திங்கள்கிழமை செய்யப்பட்டது.
அந்த 4 பேரில், லவ் ப்ரீத் சிங் (19), நக்ஷத்ரா சிங் (65) மற்றும் தல்ஜித் சிங் (42) ஆகியோர் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டார்கள். ஆனால் குர்விந்தர் சிங்கின் (22) இறுதிச் சடங்கு நிறுத்தப்பட்டுள்ளது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், குர்விந்தர் சிங்கின் மரணத்துக்கான காரணம் அதிர்ச்சியும் ரத்தக் கசிவும் தான் என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த அறிக்கையை தவறு என்றும், குர்விந்தர் உடலில் குண்டு பாய்ந்ததால் தான் அவர் இறந்ததாக குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். குர்விந்தர் சிங்க்கு மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்படும் வரை இறுதி சடங்குகள் செய்யப்படாது என்று அவரது உறவினர்கள் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்திவிட்டனர்.
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் செவ்வாய்க்கிழமை குர்விந்தரின் குடும்பத்தை நேரில் சென்று பார்த்தார். விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நிர்வாகம் ஒப்புக்கொண்டது. நள்ளிரவு லக்னோவில் இருந்து மருத்துவர்கள் குழு பஹ்ரைச்சிற்கு வந்தது, குர்விந்தரின் பிரேத பரிசோதனை பஹ்ரைச் பிரேத அறையில் மீண்டும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் செய்யப்பட்டது.
இந்த வன்முறையில் 4 விவசாயிகளைத் தவிர, 3 பாஜக தொழிலாளர்கள் ஹரி ஓம் (35), ஷ்யாம் சுந்தர் (40) மற்றும் சுபம் மிஸ்ரா (30) மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் (28) ஆகியோரும் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை ஞாயிற்றுக்கிழமை இரவிலும், அவர்களின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை செய்யப்பட்டன.