மூக்கு வழியாக ஸ்பிரே : கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய நடவடிக்கை
கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க மூக்கு வழியாக செலுத்தும் ஸ்பிரே மருந்தை இங்கிலாந்தின் போக்ஸ்பயோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போக்ஸ்பயோ என்ற இங்கிலாந்து நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கி இருக்கிறது.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதில் 63 சதவீதம் பயன் தருவல்லது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்திருக்கிறது.
இதற்கான அனுமதியைப் பெற, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அது விண்ணப்பித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, இங்கு மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என போக்ஸ்பயோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த தடுப்பு மருந்தை அதிகபட்ச ஆபத்தைக் கொண்டுள்ள 648 சுகாதார பணியாளர்களைக் கொண்டு சோதித்துப் பார்த்ததில் இது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் செயல்திறனைக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும்.
இது 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத் தரும் என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ராகேஷ் உப்பல் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமானது என்றபோதும், அது 100 சதவீதம் பயன் கொடுப்பதில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா பாதிப்பு அபாயம் இருக்கத்தான் செய்கிறது. போக்ஸ்வெல் என்ற பெயரில் நாங்கள் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்து, தடுப்பூசி, சுய பாதுகாப்பு கருவிகளுடன் கூடுதல் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றார்.
