பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 பேர் உள்பட 6 பேர் அதிரடி கைது! பல திடுக்கிடும் தகவல் அம்பலம்

1 week ago

நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தசரா, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டிருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அந்த சோதனையில், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஒருவரும், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 22 வயது முதல் 47 வயதுடைய அவர்களிடமிருந்து 2 கையெறி குண்டுகள், ஒரு கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து மற்றும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப் பாக்கியும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹீமின் சகோதரரான அனீஸ் இப்ராஹீம் இந்த தாக்குதல் திட்டத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 பயங்கரவாதிகள், சட்டவிரோதமாக படகு பயணம் மூலம் பாகிஸ்தானில் உள்ள தாட்டா பகுதிக்கு சென்று அங்குள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு 15 நாட்கள் பாகிஸ்தான் ராணுவ உடையில் இருந்த இருவர், பயிற்சி அளித்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்திருக்கிறது. மிகப்பெரிய சதி திட்டத்தை முறியடித்துள்ள டெல்லி காவல் துறை இதுதொடர்பாக மேலும் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளது. 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்