“பிராமணர்களை விரட்டியடிக்க வேண்டும்” – முதல்வரின் தந்தை மீது வழக்குப் பதிவு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. பூபேஷ் பாகல் முதலமைச்சராக உள்ளார். இவரது தந்தை நந்தகுமார் பாகல். இவர் சமீபத்தில் உத்தரப் பிரதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, அவர் பேசுகையில் பிராமணர்கள் சமுதாயத்தைக் கடுமையாக விமர்சித்தார். ‘உங்கள் கிராமத்துக்குள் பிராமணர்களை அனுமதிக்காதீர்கள்’ என இந்தியாவிலுள்ள அனைத்து கிராமத்துவாசிகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பிராமணர்களைப் புறக்கணியுங்கள் என நான் நாட்டிலுள்ள அனைத்து சாதியினரிடமும் சொல்வேன். அவர்களைக் கட்டாயமாக வோல்கா ஆற்றின் கரைக்கே திருப்பி அனுப்ப வேண்டும்” என்று சர்ச்சையாக பேசினார்.
இதனையடுத்து, சர்வ் பிராமண சமாஜ் என்ற அமைப்பு டி.டி. நகர் காவல் துறையினரிடம் நந்தகுமார் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நந்தகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இரு பிரிவினரிடையே பகையை வளர்த்தல் 153-ஏ பிரிவு, கலவரத்தை ஏற்படும் நோக்கில் பேசுதல் 505-1பி பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தந்தை பேசியது தொடர்பாக முதமைச்சர் பூபேஷ் பாகலிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜனநாயக நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்துக்கு மேலானவர்கள் என யாரும் இல்லை. சட்டம்தான் உயர்ந்தது. மாநில அரசு அனைவருக்கும் பொதுவானது. என்னுடைய 86 வயது தந்தையாக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம். சத்தீஸ்கர் அரசு ஒவ்வொரு மதத்தையும், சமூகத்தையும், பிரிவினரையும் மதிக்கிறது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறது.
குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக என் தந்தையின் கருத்து சமூக ஒற்றுமையைக் குலைக்கிறது. என் தந்தையின் கருத்தால் நானும் வேதனைப்படுகிறேன். எங்களுடைய அரசியல் பார்வைகள், நிலைப்பாடு வேறு. ஒரு மகனாக என் தந்தையை நான் மதிக்கிறேன். ஆனால், மாநில முதல்வராக அவரின் பேச்சுக்கு அவரை மன்னிக்க முடியாது. பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவரை மன்னிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
