இன்று முதல் இரவில் நிலவொளியில் மின்னும் தாஜ்மஹாலை கண்டு ரசிக்கலாம் : தொல்லியல் துறை அனுமதி

india-samugam thajmahal
By Nandhini Aug 21, 2021 07:03 AM GMT
Report

இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்று. தற்போது இனி தாஜ்மஹாலை இரவிலும் ரசிக்க இன்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா நகரின் யமுனை நதிக் கரையோரம் தாஜ்மஹால் அமைந்துள்ளது. பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள தாஜ்மஹால் வரலாற்றுப் புகழ் வாய்ந்த காதல் நினைவுச் சின்னமான விளங்குகிறது.

பகலை விட இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் தாஜ்மஹால் மின்னும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதனை ரசிக்க ஏராளமானோர் அங்கு வருகை தருவார்கள்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச் 17ம் தேதியிலிருந்து இரவில் தாஜ்மஹாலை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தாஜ்மஹால் மூடப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் இரவு நேரத்தில் மூன்று பிரிவுகளாக பார்வையாளர்கள் தாஜ்மஹாலை பார்வையிட அனுமதிக்கப்படுவர் என தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது.

இது குறித்து, ஆக்ரா தொல்லியல் துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வரன்கர் கூறுகையில், தாஜ்மஹாலை இரவில் ரசிக்க ஆக., 21, 23, 24 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இரவு 8:30 – 9:00; 9:00 – 9:30; மற்றும் 9:30 – 10:00 மணி வரை என மூன்று பிரிவுகளில் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பிரிவிலும், தலா 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான டிக்கெட்டை ஆக்ரா மால் சாலையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி கிடையாது என்றார். 

இன்று முதல் இரவில் நிலவொளியில் மின்னும் தாஜ்மஹாலை கண்டு ரசிக்கலாம் : தொல்லியல் துறை அனுமதி | India Samugam