பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் - கிடுக்கிப்பிடி விசாரணையில் கடுப்பான போலீஸ்!
பிரதமர் மோடிக்கு டெல்லியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். அவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய இளைஞர் ஒருவன், தான் பிரதமர் மோடியை கொலை செய்யப் போகிறேன் என்று கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அந்த எண்ணை ட்ரேஸ் செய்தனர். அழைப்பு விடுத்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி கண்டுபிடித்தனர்.
கஜூரி ஹாஸ் பகுதியை சேர்ந்த அர்மான் என்ற இளைஞனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது தந்தை திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் எனக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. வீட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பதே நல்லது என்றான். அதனால்தான் நான் இவ்வாறு செய்தேன் என்றார்.
இளைஞன் சொன்ன பதிலைக் கேட்டு போலீசார் கடுப்பானார்கள். தற்போது அந்த இளைஞனை காவல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அர்மான் போதையில் போனில் பேசியுள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அர்மான் ஏற்கனவே கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு தான் விடுதலையாவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
