1200 கிலோ மீட்டரில் தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற மகளை சோகத்தில் ஆழ்த்திய மோகன்பஸ்வான்!
பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாததால் கால் நடக்க முடியாத தந்தையுடன் 1200 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்து ஊர் திரும்பிய பாசமகள் ஜோதிகுமாரியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறார் மோகன்பஸ்வான்.
மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், சைக்கிளிலேயே ஊர் திரும்புவது என்று முடிவெடுத்த ஜோதிகுமாரி, கால் நடக்க முடியாத தன் தந்தையை சைக்கிளில் அமரவைத்து, 7 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து 1200 கிலோ மீட்டர் கடந்து சொந்த ஊரைச் சென்று அடைந்தார்.
1200 கிலோமீட்டர் தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற மகளின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. உலகமே ஜோதி குமாரியை பாராட்டியது.
அமெரிக்க அதிபராக இருந்த ட்ரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கூட, 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1200 கிலோ மீட்டர் தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டிருந்தார். அம்மாநில அரசியல் கட்சிகள் ஜோதிகுமாரியின் வீட்டிற்கு நிதியுதவிகளும் செய்தது.
இந்நிலையில், நேற்று காலையில் மோகன் பஸ்வான் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார். தந்தையை இழந்து நிற்கும் பாசமகள் ஜோதிகுமாரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.