பல கோடிகளை வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்ப்பு விவகாரம்? - சச்சின் தரப்பில் விளக்கம்

india-sachin-news-sports
By Nandhini Oct 04, 2021 08:17 AM GMT
Report

வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவை; சட்டப்பூர்வமானது என சச்சின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

`பண்டோரா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகி உள்ள அப்பட்டியலில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் அனில் அம்பானி மற்றும் நீரவ் மோடி உட்பட மொத்தம் 380 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியானதால் தற்போது புயலை கிளப்பியுள்ளது. சச்சின், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மாமனார் ஆனந்த் மேத்தா ஆகியோர், விர்ஜின் தீவுகளில் இயங்கிய சாஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக அந்த ஆய்வு அறிக்கையில் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஆனால் சட்ட விரோதமாக வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டை சச்சின் தரப்பு மறுத்திருக்கிறது.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநர் மிரின்மோய் முகர்ஜி கூறியதாவது -

இந்த விவகாரத்தில் சச்சினின் முதலீடு சட்டப்பூர்வமானதாகும். அந்த முதலீடு அவரது வருமானத்திலிருந்தே செலுத்தப்பட்டிருக்கிறது. இதன் வரி முறையாக கணக்கிடப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்ட விவரங்கள் அனைத்தும் வெளிப்படையானவைதான். வரி செலுத்திய ஆவணங்கள் தெளிவாக இருப்பதால், அறிக்கையில் குறிப்பிட்டது போல, எவ்வித குற்றச்செயல்களில் சச்சின் ஈடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

பல கோடிகளை வெளிநாடுகளில் முறைகேடாக சொத்து சேர்ப்பு விவகாரம்? - சச்சின் தரப்பில் விளக்கம் | India Sachin News Sports