இந்தியாவில் 25 நிமிடங்களுக்கு ஒரு குடும்பத்தலைவி தற்கொலை, இது தான் காரணமா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த தற்கொலைகள் பற்றிய தகவலின்படி இந்தியாவில் அரை மணி நேரத்திற்கு ஒரு குடும்பத்தலைவி தற்கொலை செய்துகொள்கிறார்.
பெரும்பாலும் குடும்ப வன்முறை, பொருந்தாத திருமணம் இதற்கு காரணமாகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பக தகவல் படி கடந்த 2020-ல் 22,372 குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது சராசரியாக ஒவ்வொரு நாளும் 61 பேர் அல்லது 25 நிமிடங்களுக்கு ஒரு குடும்பத் தலைவி இறப்பதை குறிக்கிறது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை 1,53,052. அதில் குடும்பத் தலைவிகள் எண்ணிக்கை மட்டும் 14.6 சதவீதமாக உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மொத்த பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகம் ஆகும்.
கடந்த ஆண்டு மட்டுமின்றி 1997-ல் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்கொலை தரவுகளை பதிவு செய்யத் தொடங்கியதிலிருந்து ஆண்டுதோறும் 20,000-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
இத்தற்கொலைக்கான காரணமாக குடும்பப் பிரச்னைகள், விருப்பமில்லாத திருமணம், புகுந்த வீட்டில் பிரச்னை ஆகியவை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி குடும்ப வன்முறை, 18, 19 போன்ற இளம் வயதில் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டு அங்கு அனுபவிக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சொந்த விருப்பு, வெறுப்புகள், கனவுகளுக்கு இடமில்லாமல் ஏற்படும் விரக்தி, நிதிநிலை பிரச்னை ஆகியவையும் குடும்பத் தலைவிகளின் தற்கொலைக்கு காரணமாகின்றன.
ஒரு இரண்டு நிமிடம் மனநல ஆலோசகர் போன்ற சரியான நபர்களிடம் அவர்கள் பிரச்னையை பகிர்ந்தாலே தற்கொலையை கைவிட்டுவிடும் மனநிலையில் தான் இருப்பார்கள்.
அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெண்களுக்காக பணியாற்றும் அமைப்புகள் கூறுகின்றன.