காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீண்டும் கைது - நடந்தது என்ன?

india-priyankagandhi-arrest
By Nandhini Oct 21, 2021 04:04 AM GMT
Report

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவில் இருக்கும் காவல் நிலைய குடோனில் ரூ.25 லட்சம் திருடப்பட்டது. இது குறித்து குடோனில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த விசாரணையில் அந்த அந்த தொழிலாளி பணம் திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாயை போலீசார் இன்று மீட்டார்கள். பின்னர், அந்த துப்புரவு தொழிலாளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அந்த துப்புரவு தொழிலாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திடீரென உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரை போலீசார்தான் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, போலீஸ் காவலில் இறந்த துப்புரவு தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க சென்றார். அப்போது, அவரை லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் தடுத்து நிறுத்தினர்.

இதற்கு பதிலளித்த காந்தி, “நான் ஆக்ரா செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். நான் எங்கு சென்றாலும் அவர்கள் என்னைத் தடுக்கிறார்கள். குறிப்பாக, நான் கட்சி அலுவலகத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல முயன்ற தருணத்தில், அவர்கள் (நிர்வாகம்) என்னைத் தடுக்க முயல்கிறார்கள். இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது,” என்றார்.

போலீசாரிடம் பிரியங்கா காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘அருண் வால்மீகி போலீஸ் காவலில் இறந்தார்.அவருடைய குடும்பம் நீதி கோருகிறது. நான் அந்த குடும்பத்தை சந்திக்க விரும்புகிறேன். உ.பி அரசு எதற்கு பயப்படுகிறது? நான் ஏன் தடுக்கப்படுகிறேன்?.இன்று வால்மீகி ஜெயந்தி,பிரதமர் மோடி புத்தரை பற்றியெல்லாம் பெரிதாக பேசினார் ஆனால் இது அவர் பேசியதை தாக்குகிறது’ என்று பதிவிட்டார்.

இதற்கு முன்னதாக, லக்கிம்பூர் கேரி வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.