குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும் போது பதாகையை உயர்த்தி எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி. எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி குடியரசுத் தலைவரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடப்பாண்டிற்கான முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும்போது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்றும், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் பேசத் தொடங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியை சேர்ந்த எம்.பி.யான ஹனுமன் பெனிவல் அவையிலிருந்து எழுந்து குடியரசுத் தலைவர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று பதாகையினை உயர்த்திப் பிடித்து முழக்கங்களை சத்தமாக எழுப்பினார்.
இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.