பிரதமரே… ஆப்கனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள் – காங்கிரஸ்!
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் அதிபர் பதவி விலகினார். இதனையடுத்து, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். தாலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் சென்றதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இதனால், அந்நாட்டிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். காபூலில் மக்கள் திரண்டதால் காபூலிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் தாலிபான்கள் ரத்து செய்தார்கள். ராணுவ விமானங்களை தவிர பிற எந்த விமானமும் இயங்கக் கூடாது என அறிவித்துள்ளனர்.
இதனால், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று பிற்பகல் 12.30 மணிக்கு டெல்லியிலிருந்து ஆப்கானிஸ்தான் சென்று இந்தியர்களை மீட்டு வரவிருந்த ஏர் இந்தியா விமானம் வளைகுடாவுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால், இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங், ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது.
இதனால், இந்திய குடிமக்கள் ஆபத்தில் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தியர்களை மீட்கும் முயற்சியை பிரதமர் மோடி கைவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தெளிவான திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
