பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஏன் விவாதிக்க கூடாது? - கொட்டும் மழையில் நனைந்து கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி

india-politics
By Nandhini Jul 28, 2021 08:31 AM GMT
Report

மொபைல் போன் ஒட்டுக்கேட்பு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், பார்லிமென்ட் இரு அவைகளில் எந்த பணிகளும் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பார்லிமென்டில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜூனா கார்கே தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் பார்லி., வளாகத்தில் கொட்டும் மழையில் நனைந்தவாறு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராகுல் கூறியதாவது:

ஒட்டுக்கேட்பதற்காக பெகாசஸ் ஸ்பைவேரை இந்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற ஒரே ஒரு கேள்வியை தான் நாங்கள் கேட்டுக்கொண்டு வருகிறோம். அதற்கு மத்திய அரசு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். பெகாசஸ் என்னும் ஆயதத்தை சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதா? பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் எந்த விவாதமும் நடைபெறாது என மத்திய அரசு தெளிவாக கூறி இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி உங்கள் தொலைபேசியில் ஒரு ஆயுதத்தை அனுப்பியுள்ளார். இந்த ஆயுதம் எனக்கு எதிராக மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம், பல தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ஏன் பார்லி.,யின் அவைகளில் விவாதிக்க கூடாது? பார்லியில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்பட்டு வருகிறது.

பார்லிமென்ட் நடவடிக்கைகளை நாங்கள் தொந்தரவு செய்கிறோம் எனக் கூறுகிறார்கள். நாங்கள் சபையைத் தொந்தரவு செய்யவில்லை, எங்கள் கடமைகளை செய்கிறோம். இந்த ஆயுதம் (பெகாசஸ்) பயங்கரவாதிகள் மற்றும் தேச விரோதிகளுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெகாசஸ் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி விரிவான விளக்கம் எங்களுக்கு வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.