இஸ்ரேல் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு : இந்திய பிரதமர் மோடி வாழ்த்து!
இஸ்ரேலின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நஃப்தலி பென்னட்டிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
12 ஆண்டுகள் இஸ்ரேல் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலின் புதிய பிரதமர் பென்னெட்டிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து பிரதமர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இஸ்ரேலின் பிரதமராக பொறுப்பேற்ற நஃப்தலி பென்னெட்டிற்கு வாழ்த்துக்கள். நாம் தூதரக உறவை புதுப்பித்து அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் உங்களை சந்தித்து நமது இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த நான் ஆர்வமாக உள்ளேன்.
பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ள இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். நெதன்யாகு உங்கள் பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இஸ்ரேல் – இந்திய உறவில் உங்கள் தலைமை மற்றும் தனிப்பட்ட கவனத்திற்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.