பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு!
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மே 6ம் தேதி டெல்லியிலுள்ள சத்ராசல் அரங்கில், மூத்த மல்யுத்த வீரர்களும், இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் இளம் மல்யுத்த வீரர்கள் குமார், அஜய், பிரின்ஸ், அமீத், சாகர் குமார் ஆகிய 5 வீரர்களுடன், சுஷில் குமார் உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஒருவரையொருவரை கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.
இந்தச் சண்டையில் கடுமையாகத் தாக்கப்பட்ட சாகர் குமார் (23) என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சோனு மகால், ஆமீத் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களில் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமாரும் ஒருவர். இவர் தற்போது தலைமறைவாகி உள்ளார்.
இவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்பதால் டெல்லி போலீசார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சுஷில் குமார், இருப்பிடம் குறித்து யாராவது தகவல் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். இறந்துப்போன சாகர் தங்கியிருந்த வீடு, மூத்த வீரர் ஒருவருக்குச் சொந்தமானது. அந்த வீட்டை சாகர் காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட மோதல்தான் கொலையில் முடிந்ததாக காவல் துறை விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சார்பில், டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிமன்ற கூடுதல் நீதிபதி ஜகதீஷ் குமார், முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
