குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் – பிரதமர் மோடி பேச்சு

india-modi-meeting-speech
By Nandhini Nov 26, 2021 07:28 AM GMT
Report

குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம். நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் மகாத்மா காந்தி போராடினார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது -

பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பே ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம்.

எதிர்கால தலைமுறையினர் நமது அரசியலமைப்பு பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நாள் தான் எதிரிகள் இந்தியாவில் நுழைந்து தாக்குதல் நடத்திய துக்க நாளாகும். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டில் பல கட்சிகள் குடும்ப அரசியல் செய்து வருகின்றன.

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம். நம்மை நாமே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் மகாத்மா காந்தி போராடி இருக்கிறார்.

அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம் அதுவே ஆகும். அந்த சட்டம் நிறைவேற வேண்டும். குடும்ப அரசியல் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். குடும்ப அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்களது ஜனநாயக மதிப்பீடுகளை இழந்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார். 

குடும்ப அரசியல் செய்ய நினைப்பவர்கள் யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் – பிரதமர் மோடி பேச்சு | India Modi Meeting Speech