கோவை வந்துள்ள பிரதமர் மோடி: தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன?
பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
கோவையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பங்கேற்று, முதற்கட்டமாக பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
இதற்கு முன்னர் பேசிய முதல்வர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன். நீர் மேலாண்மையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
தண்ணீரை வீணாக்காமல், அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் ஒப்படைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ஈரோடு கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். தமிழகத்தில் 9 ஸ்மார்ட் சிட்டிகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.
அதோடு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கோவை சேலம் உள்பட 9 நகரங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.