இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ‘பிரலே’ ஏவுகணை சோதனை வெற்றி - டிஆர்டிஓ அதிகார அறிவிப்பு

india missile-test TRDO Reporting
By Nandhini Dec 22, 2021 09:53 AM GMT
Report

500 கிமீ வரையிலான இலக்குகளை தாக்கும், இந்தியாவின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த தொலைவில் இருக்கும் இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கும் வகையிலான ‘பிரலே’ ஏவுகணை சோதனை இன்று நடைபெற்றுள்ளது.

ஒடிசா மாநிலம், பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து, இன்று காலை 10.30 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றது.

கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலைதூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரலே ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

முழுவதுமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த வகை பிரலே ஏவுகணை, 350 முதல் 500 கி.மீ தொலைவில் பயணித்து கண்டம் விட்டு கண்டம் தாக்கி இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது 500 முதல் 1000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறமை கொண்டுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்திருக்கிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ‘பிரலே ஏவுகணை’ இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்போதும், அதன் திசையை (பாதையை) மாற்றியமைக்கும் வகையில் அதிநவீன வசதியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.