இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம் - ரசிகர்கள் சோகம்
வரலாற்று சாதனைகளை எப்போதும் நிகழ்த்தி பழகிய இந்திய அணி, நேற்று நிகழ்த்திய வரலாற்று சாதனை இந்திய ரசிகர்கள் மனதை பலமாக காயப்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வென்றதில்லை என்கிற பாகிஸ்தானின் மோசமான வரலாற்றை, தங்களின் மோசமான விளையாட்டின் மூலம் மாற்றி அமைத்திருக்கிறது இந்திய அணி.
130 கோடி இதயங்களை ஒரே இரவில் அடித்து நொறுக்கிய 11 பேர் கொண்ட இந்திய அணியை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். விமர்சிக்க வேண்டிய தவறை தான் அவர்களும் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய அணி தோற்க சில முக்கிய காரணங்களும் அணியில் இருந்தது.
இந்திய அணியின் தேர்வு நேற்று மிக மோசமாக இருந்தது. பாஃர்மில் இல்லாத பலர் அணியில் இடம் பெற்றிருந்தனர். நல்ல பாஃர்மில் இருந்த, ஐபிஎல்.,யில் ஜொலித்த பலர் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் தண்ணீர் பாட்டில் எடுத்து வர பயன்படுத்தப்பட்டனர். ஐபிஎல் போட்டிகளில் சொதப்பிய சூர்யகுமார் யாதவ், எதன் அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டார் என்று தெரியவில்லை.
காயத்திலிருந்து மீண்ட புவனேஷ்வர்குமார், கடந்த 10 போட்டிகளில் 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். அவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை. ஹர்திக் பாண்ட்டியாவுக்கு காயம் என்று தெரிகிறது. பந்து வீசமுடியாத அவர் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 236 போட்டிகளில் விளையாடியுள்ள அனுபவ அஷ்வினை சேர்க்காமல் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு அளித்தது. நல்ல பார்ஃமில் இருந்த ஷர்துல் தாகூரை அணியில் சேர்க்காமல் பெவிலியனில் அமர வைத்தது. ஐபிஎல்., போட்டிகளில் நல்ல பார்மில் இருந்த இஷான் கிஷானை அணியில் சேர்க்க தவறியது.
இப்படி இந்திய அணியின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவற்றை வரும் போட்டிகளில் சுயபரிசோதனை செய்யாமல் போனால், இந்திய கிரிக்கெட் அணி இன்னும் கடுமையான பாடங்களை தான் கற்க வேண்டியிருக்கும்.