இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த கேப்டன் கே.எல்.ராகுல் - கடுப்பான ரசிகர்கள்

viratkohli KLRahul INDvSA SAvIND
By Petchi Avudaiappan Jan 20, 2022 12:30 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைய கேப்டன் கே.எல்.ராகுல் தான் காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நேற்று நடைபெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத காரணத்தால் கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.

இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த கேப்டன் கே.எல்.ராகுல் - கடுப்பான ரசிகர்கள் | India Lose The Match Against South Africa

இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா வெண் டர் டுசேன்(129* ரன்கள்), கேப்டன் பவுமா(110 ரன்கள்) அதிரடியால் 50 ஓவர்கள்முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் குவித்தது. பின்னர் 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான்(79 ரன்கள்), விராட் கோலி (51 ரன்கள்), ஷர்துல் தாகூர் (50 ரன்கள்) மட்டுமே சிறப்பாக விளையாடினர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் கேப்டனாக கே எல் ராகுல் எடுத்த சில முடிவுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அதன்படி  இந்திய அணியின் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் நேற்று ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை அணியில் எடுத்ததால், அவர் பந்து வீசுவார் என அனைவரும் கருதினர்.ஆனால் அவருக்கு ஒரு ஓவரை கூட ராகுல் வழங்கவில்லை.

தென்னாப்பிரிக்க அணியின் முதல் 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்ந்த நிலையில், பாவுமா - வெண்டர் டுசன் ஆகியோர் இந்திய அணியின் பந்து வீச்சினை அடித்து நொறுக்கினர். அந்த சமயத்திலாவது, வெங்கடேஷ் ஐயரை பந்து வீசச் செய்திருக்கலாம். ஆனால், ராகுல் அந்த முடிவினை எடுக்கவில்லை. அப்படி வாய்ப்பு கொடுத்து, ஒரு வேளை விக்கெட் கிடைத்திருந்தால், இலக்கு குறைந்து, இந்திய அணி வெற்றி பெறவும் சில சமயம் வாய்ப்பு உருவாகியிருக்கலாம்.

பேட்டிங்கிற்காக மட்டுமே வேண்டி வெங்கடேஷை அணியில் எடுத்திருந்தால் அதற்கு பதிலாக வெளியே இருக்கும் ருத்துராஜ், இஷான் கிஷான் அல்லது சூர்யகுமார் ஆகியோரை களமிறக்கி இருக்கலாம் என்றும், அவர்கள் இந்திய அணி இலக்கை எட்டவாவது உதவி இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே, ராகுலின் கேப்டன்சியில் அதிக அளவு திறனும், அனுபவமும் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், முதல் ஒரு நாள் போட்டியிலேயே கடுமையான விமர்சனத்தை ராகுல் சந்தித்து வருவதால், விரைவில் தன்னிடம் உள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் உள்ளது.

இதேபோல் இந்திய அணியின் தோல்விக்கான இன்னொரு காரணமாக பார்க்கப்படுவது, மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை தான். இந்திய அணியில் பெரிய பிரச்சனையாக இது இருக்கும் நிலையில் தொடர்ந்து  ஒரே வீரர்களும் களமிறங்கப்பட்டு வராமல், மாறி மாறி வீரர்கள் களமிறக்கப்படும் நிலையில் இதற்கு தீர்வு கிட்டாமல் உள்ளது. இத்தகைய தவறுகளை திருத்தி இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.