நீங்க எல்லாம் விளையாடத்தான் வர்றீங்களா? - இந்திய அணியை கடுமையாக சாடிய அக்தர்

INDvNZ shoaibakhtar teamindia
By Petchi Avudaiappan Nov 02, 2021 12:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்துள்ள நிலையில் இதுதொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியை கடுமையாக சாடியுள்ளார். 

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்தியாவின் தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பேட்டிங் ஆர்டர் மாற்றியதே அணியின் சரிவுக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

அனுபவமில்லாத இஷன் கிஷானை ஒப்பனராக இறக்கியதும் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் இந்தியா மிகவும் சாதாரண அணியாக தோற்றமளித்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் திட்டங்கள் என்ன? என்பதை புரிந்து கொள்ள சிரமப்பட்டதாக கூறியுள்ளார். 

ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராட் கோலி போன்ற வீரர்கள் ஏன் தங்கள் பேட்டிங் நிலைகளை மாற்றினார்கள் என்பதை புரிந்து கொள்ள சிரமப்பட்டதாக தெரிவித்த அவர் இளம் வீரரான இஷான் கிஷன் அவர்களுக்கு முன்னாள் ஏன் அனுப்பப்பட்டார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஹர்திக் பாண்டியா கடைசியில்தான் பந்துவீசுகிறார். இந்தியா என்ன விளையாட்டுத் திட்டத்துடன் விளையாடுகிறது? என்று தனக்கு புரியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.