பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா 7,500 கோடி நிதியுதவி..!

IndiaHelp IndiaLoanToSrilanka 1billionDollers IndiaHelpSrilanka
By Thahir Mar 17, 2022 11:48 AM GMT
Report

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கைக்கு இந்தியா ரூ.7,500 கோடி(1 பில்லியன் டாலர்) கடனுதவி செய்ய முன்வந்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை.இதனால் இலங்கையின் ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சுற்றுலாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் விளைவாக, இலங்கையின் அந்நிய செலாவணி வரத்தும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.

சீனா உள்பட பல நாடுகளின் கடன் வலையில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.

நாட்டில் உணவுப் பிரச்னை மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதுடன், பணவீக்கத்தின் தாக்கம் பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையில், சீனா உள்பட பல நாடுகளின் கடனில் சிக்கியுள்ள இலங்கை, தற்போது திவாலாகும் நிலையை எட்டியுள்ளதால், மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தினசரி உணவுப் பொருள்கள் வரலாறு காணாத விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 16.3 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்நியச் செலாவணியின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால், இலங்கை ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, பருப்பு கிலோ ரூ.250, சர்க்கரை ரூ.215, உருளைக்கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400, உளுந்து கிலோ ரூ.2,000, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.35 அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடும் பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை இந்திய அரசிடம் உதவி கேட்ட நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க ரூ.7,500 கோடி கடனுதவி வழங்க இந்தியா முன்வந்ததுடன் இதுதொடர்பாக இரு நாட்டிற்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது. முன்னதாக, கடந்த மாதம் இந்தியா இலங்கைக்கு ரூ.3,750 கோடியை கடனுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.