உலக ஸ்னூக்கர் போட்டி; தங்கம் வென்ற இந்திய வீராங்கனை கீர்த்தனா பாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு!
உலக ஸ்னூக்கர் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை கீர்த்தனா பாண்டியனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாண்டியன்-ஜெயலட்சுமி. இவர்களது மகள் கீர்த்தனா. இவர் கோலார் தங்கவாய் ஜெயின்ஸ் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
ஸ்னூக்கர் வீராங்கனையான கீர்த்தனா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்னூக்கர் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் சவுதி அரேபியாவில் நடைபெற்ற 21 வயதுக்கு உட்பட்டோருக்கான அனைத்துலக ஸ்னூக்கர் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார் வீராங்கனை கீர்த்தனா. இதன் மூலம் இந்தியாவுக்கும் கர்நாடகா மாநிலத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார்.
உற்சாக வரவேற்பு
இந்நிலையில் பதக்கத்தை வென்ற பிறகு கீர்த்தனா நேற்று சொந்த ஊரான கோலார் தங்கவயலுக்கு வந்தார். அவர் படிக்கும் கல்லூரி சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் அவருக்கு மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.