இந்தியாவில் அறிமுகமாகும் ஹைட்ரஜன் ரயில் - எப்போது தெரியுமா?
நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வே
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பொதுப்போக்குவரத்திற்காக ரயில்களை பயன்படுத்துகின்றனர். பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்கிறது.
சில ஆண்டுகளாக பல்வேறு வழித்தடங்களில். முழுக்க ஏசி, தானியங்கி கதவுகள் என பல வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில் மக்களிடையே நல்ல வரவேற்பைபெற்றது. ஸ்லீப்பர் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலையும் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது.
ஹைட்ரஜன் ரயில்
இதனிடையே சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது இந்தியன் ரயில்வே. தற்போது பயன்பாட்டில் உள்ள டீசல் எஞ்சின் கொண்ட ரயில் டீசலை ஆற்றலாக மாற்ற அதை எரிக்கும். போது மிகப் பெரிய அளவில் கார்பனை வெளியேற்றி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், இயற்கை எரிவாயு, அணுசக்தி, பயோமாஸ் மற்றும் சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற பல்வேறு உள்நாட்டு வளங்களில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். இந்த ரயில்கள் சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களுக்கு ரூ.2800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய வழித்தடங்களில் ஹைட்ரஜன் தொடர்பான உள்கட்டமைப்புக்காக தனியாக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் டிசம்பர் மாத இறுதியில், டில்லி, ஜிந்த்- சோனிபட் இடையேயான வழித்தடத்தில் 89 கி.மீ., தூரம் வரை இயக்கப்படும். இதன் பின் ஜனவரி முதல் டெல்லி கோட்டத்தில் முதல் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஹைட்ரஜன் ரயிலை இயக்கும் 5 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது.