ஒமைக்ரான் பரவல் எதிரொலி - வெளிநாட்டு விமானங்களை இயக்கும் திட்டம் நிறுத்திவைப்பு

threat omicron internationalflights resumption delays
By Thahir Dec 01, 2021 12:30 PM GMT
Report

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து இரண்டாவது அலை முடிவுக்கு வந்ததையொட்டி வர்த்தக சர்வதேச விமானங்களின் சேவை வருகிற டிசம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது ஒமைக்ரானின் பரவலின் எதிரொலியால் இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“ஒமைக்ரான் பரவலை முன்னெச்சரிக்கையோடு தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தியாவுக்குள் வரும் பயணிகளுக்கு ஏற்கனவே தொடர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, புதிய கொரோனா உருமாற்ற நோய்த்தொற்று ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான சோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய சூழ்நிலையை இணைத்துப் பார்த்து, அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

வர்த்தக சர்வதேச விமானங்களின் மறுதொடக்கம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் நடைமுறையில் ஒரே இரவில், கட்டுப்பாடுகள் மீண்டும் திரும்பியுள்ளன. எனவே ஒமைக்ரான் பரவலை தடுக்கும்பொருட்டு சர்வதேச விமான சேவை மறுதொடக்கம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட வணிக சர்வதேச பயணிகள் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தேதியைக் குறிக்கும் பொருத்தமான முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்.

இன்று காலை, உருமாற்ற ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தில் சிக்கியுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனையை உள்ளடக்கிய விமான நிலையங்களுக்கான தொடர் வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு அவசியம்”என விமானப்போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.