இந்திய அணியை வீழ்த்துவது எங்களுக்கு ரொம்ப ஈஸி: ஆப்கானிஸ்தான் வீரர் சவால்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றி பெற முடியும் என அந்த அணியின் பந்துவீச்சாளரான ஹமீத் ஹசன் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து கிட்டதட்ட தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்கள் மீது கிரிக்கெட் ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.
இந்திய அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.
இந்தப் போட்டிகளில் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா என்பதே அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்பதால் கிட்டத்தட்ட இந்திய அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
இதனிடையே இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளரான ஹமீத் ஹசன், இந்திய அணியை வீழ்த்தும் திறன் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் போதுமான ரன்கள் குவித்துவிட்டால் அதுவே எங்களுக்கு மிகப்பெரும் சாதகமாக அமையும்.
எங்களிடம் உள்ள பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை வைத்து இந்திய அணியை எங்களால் வீழ்த்த முடியும். எங்களது தற்போதைய ஒரே இலக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது தான்.
எங்களிடம் ரசீத் கான், முகமது நபி போன்ற உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எங்களிடம் உள்ள பந்துவீச்சு பலத்தை வைத்து இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை விரைவாக வீழ்த்த முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.