ராணுவ ஹெலிகாப்டர் விபத்தா, வெளிநாட்டு சதியா? பின்னணி என்ன? ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பரபரப்பு பேட்டி
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் விபத்தா அல்லது வெளிநாட்டு சதியா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இதற்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் கூறியதாவது -
இந்த விபத்து ஒரு மிகவும் துரதிர்ஷ்டமானது. ராணுவ உயர் அதிகாரிகள் போகும்போது, அவர்களுக்குண்டான விமானம், ஹெலிகாப்டர் அதிகபட்ச பாதுகாப்பு கொண்டது.
இந்த மி-17 வி5 ரக ஹெலிகாப்டர், உத்தரகண்ட் மாநிலத்தில் அதிகளவு வெள்ளம் வந்தபோது மக்களை மீட்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இந்தியாவில் உள்ள பல மீட்பு நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த விமானம் சமகால அதிக நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டது. பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவுதான். இயந்திரக்கோளாறு என்பது எந்தவொரு இயந்திரத்திற்கும் வரலாம்.
தவிர இடி மின்னல் தாக்குதல், குறைந்த உயரத்தில் பறக்கும்போது பனி மூட்டம், மரத்தின் மீது தவறுதலாக மோதுதல், போன்ற காரணங்களால் விபத்துகளில் சிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சதிச் செயல்கள் நடப்பதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதற்கு மறுப்பதற்கில்லை.
விபத்தில் உயிரிழந்த முப்படைத்தளபதி பிபின் ராவத் கையில் எடுத்துள்ள சில வேலைகளை எல்லாம் பார்க்கும்போது, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில், வெளிநாட்டு அமைப்புகளின் சதி திட்டமாககூட இது இருக்க வாய்ப்பு இருக்கிறது.
பிரதமர் மோடி சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த விசாரணையை ஏற்கனவே விமானப்படையினர் தொடங்கி விட்டனர். இந்த விபத்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது.
ஏனெனில் ரஷ்ய தயாரிப்பான இந்த ஹெலிகாப்டர் அதிகபட்ச தொழில்நுட்பம் கொண்டது. ரஷ்ய தயாரிப்பு தான் மி-17 வி5 ரக ஹெலிகாப்டர். இந்த ஹெலிகாப்டர் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த வகையான ஹெலிகாப்டர் இதற்கு முன் இப்படி விபத்து ஆனது கிடையாது. இதை எல்லாம் மீறி ஒரு விபத்து நடந்திருக்கிறது என்றால், அது இயற்கையானதா அல்லது மனித இயல்புக்கு மீறி நடந்துள்ளதா அல்லது வெளிநாட்டு சதியா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று.
வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களை பரப்புவதால், மக்கள் பயப்பட வேண்டாம். அந்த பயம் தேவையற்றது.
இவ்வாறு மதன்குமார் தெரிவித்துள்ளார்.