குஜராத் மாநிலத்தைப் புரட்டியெடுக்கப்போகும் டவ்தே புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

india-gujarat-storm
By Nandhini May 17, 2021 01:49 PM GMT
Report

அரபிக் கடலில் நிலைக்கொண்டுள்ள டவ்தே புயல் குஜராத்தில் நாளை கரையை கடக்க இருப்பதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

அரபிக் கடலில் நிலைக்கொண்டிருந்த டவ்தே புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்தப் புயல் குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, மும்பையிலிருந்து மேற்கு திசையில், 90 கிலோ மீட்டர் தொலைவில், புயல் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில், 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை பயங்கர சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் கர்நாடக மாநிலம் மங்களூர் மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் புயல் கரையைக் கடக்க இருப்பதால், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புயல் தாக்க உள்ள பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

புயல் தாக்க இருக்கும் பகுதிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்காக மருத்துவமனைகளில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தைப் புரட்டியெடுக்கப்போகும் டவ்தே புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! | India Gujarat Storm