இனி அனைவருக்கும் பென்ஷன் - அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்
அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஓய்வூதியம்
இளமை காலத்தில் ஓடியாடி உழைப்பது போல், முதுமை காலத்தில் உழைக்க முடியாது என்பதால், முதுமை காலத்துக்கு தேவையான நிதி பாதுகாப்பை வழங்க இந்திய அரசு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தற்போது, அரசாங்க ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டப்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிஎப்) மூலம் பணம் வழங்குகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம்
இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இணைந்து 60 வயதுக்கு பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இது முழுக்க மக்கள் தன்னார்வத்தில் இணையும் திட்டமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த திட்டத்தைத் தயாரிப்பது குறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.