இந்தியாவில் முதல்முறையாக கர்ப்பம் தரித்த தந்தை குழந்தை பெற்றெடுத்தார்... - குவியும் வாழ்த்துக்கள்

Pregnancy Transgender
By Nandhini Feb 08, 2023 12:28 PM GMT
Report

இந்தியாவில் முதல்முறையாக கர்ப்பம் தரித்த 3ம் பாலினத்தைச் சேர்ந்த தந்தை குழந்தை பெற்றெடுத்தார்.

3ம் பாலினத்தைச் சேர்ந்த சஹத் – ஜியா

கேரள மாநிலம் கோழிக்கோடு, உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஹத் – ஜியா. இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. அதேபோல், ஜியா பாவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. காதலர்களாக வலம் வந்த இவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.

குழந்தை மீதான ஆசையால் முதலில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினார்கள். அதிலுள்ள சில சட்ட சிக்கல்களால் தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.

இதனையடுத்து, இருவரும் மருத்துவரை அணுகினார்கள். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது.

இதனால், அவரால் மருத்துவ சிகிச்சையின் மூலம் கர்ப்பமாக முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜியா – சஹத் இருவருமே வேறு பாலினத்திற்கு மாறும் சிகிச்சையில் இருந்தாலும், அவை இன்னும் முழுமையாக முடிவடையாததால், சஹத் கர்ப்பமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஜியாவின் விந்தணுவைப் பெற்று அதை சோதனைக் கூடத்தில் கருவாக வளர வைத்து சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தினார்கள். இந்த முறையில் சஹத் கர்ப்பம் அடைந்தார்.

india-first-transman-pregnancy-blessed-child

கர்ப்பம் தரித்த தந்தை குழந்தை பெற்றெடுத்தார்

இந்நிலையில், 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஜியா மற்றும் ஜஹாத் தம்பதிக்கு உள்ளூர் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதுதான் இந்தியாவில் திருநங்கைகளுக்கு நடத்தப்பட்ட முதல் பிரசவமாகும்.

இத்தகவலை தம்பதியினரின் நெருங்கிய நண்பர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது இவர்களுக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.